சென்னை, ஆக.21: பேசியபடி பணம் தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா மீது அந்நிகழ்ச்சியின் மேலாளர் கிண்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் கடந்த ஜூன் 23-ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக¤வருகிறது. இதில் சேரன், வனிதா, தர்ஷன், மதுமிதா உள்ளிட்ட 15 பேர் போட்டியாளர்களாக சென்றனர்.

கடந்த வாரம் திடீரென கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி நடிகர் மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் உள்ள இந்த நிகழ்ச்சியின் மேலாளரான தீனா என்பவரின் செல்போன் வாட்ஸ்அப்பிற்கு கடந்த 19-ம் தேதி நடிகை மதுமிதா ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அதில் எனக்கு பேசியப்படி பணம் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொல்வேன். அதற்கு நீங்கள் தான் காரணம் என கூறியுள்ளார்.

49 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக அவருக்கு ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் வீதம் பேசியப்படி சம்பளம் தர வேண்டும் என மதுமிதா தரப்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வேறு பிரச்சனை ஏதும் வராமல் இருக்க நிகழ்ச்சி மேலாளர் தீனா சார்பில் கிண்டி போலீசாரிடம் நடிகை மதுமிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திடீரென பிக்பாசில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.