சென்னை, ஆக.21: புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களை கேட்பதற்கும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி அந்த மாநிலத்தின் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணை நிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக்கூறி, புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட தடை விதித்து உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற பெஞ்சில் அப்பீல் செய்யாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனி நபரான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை என தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசுக்கும், யூனியன் பிரதேச அரசுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அரசியல் சாசனம் தெளிவாக தெரிவித்துள்ள நிலையில், தனி நீதிபதி தவறான முறையில் தீர்ப்பளித்துள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அமன் லேகி, அரசியல் சாசன பிரிவுகளையும், விதிகளையும் கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதேசமயம், எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, யூனியன் பிரதேச அரசின் ஆவணங்களை கேட்க துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சரியென கூறிய டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என தெரிவித்தார். இதையடுத்து, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி லட்சுமி நாராயணன், கிரண்பேடி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.