சென்னை, ஆக.21: முன்ஜாமின் மறுக்கப்பட்டதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமறைவாகிவிட்டதாக பிஜேபி மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி டிவிட் செய்துள்ளார். இதேபோல், அமைச்சர் ஜெயக்குமார், பிஜேபி தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎன்எக்ஸ மீடியா வழக்கில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தேடி வருகின்றனர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவருடைய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் தலைவர்கள் இது குறித்து தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-
ஜெயக்குமார்: எந்த வழக்காக இருந்தாலும் சந்திக்க வேண்டும். ப.சிதம்பரம் ஓடி ஒளியக்கூடாது. ப.சிதம்பரத்தை காணவில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர் என்று ஜெயக்குமார் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

சுப்ரமணிய சாமி: நேர்மையற்ற சிதம்பரம் தலைமறைவாகி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வலைவிரித்து தேடி வருகின்றன, ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கை விசாரித்தது யார்? அமலாக்கத்துறையின் இணை இயக்குனர் டாக்டர்.ராஜேஷ்வர் சிங். பதவி உயர்வு மறுக்கப்பட்டு, லக்னோவிற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது தான் அவருக்கு அளிக்கப்பட்ட பரிசு. கலியுகம். என்று சுப்ரமணிய சாமி பதிவிட்டுள்ளார்.

எச்.ராஜா: ப.சிதம்பரமும் அவரது குடும்பமும் ஊழலின் ஊற்றுக் கண்கள். அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் உங்களது குடும்பமும் சேர்ந்து உள்ளே போகும் என்று பிரியங்கா காந்தியின் டிவீட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் எச். ராஜா. மேலும், ப.சிதம்பரம் தலைமறைவுன்னு போட்ட ஒருவரது டிவீட்டில், தலைமறைவா? சுவர் ஏறிக்குதித்து ஃபியட் கார்ல ஓடியிருப்பார் என்று நக்கலடித்துள்ளார் எச். ராஜா.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை டெல்லி ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சிதம்பரத்தை கைது செய்து, விசாரணை நடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் சிதம்பரத்தின் வீட்டு வாசலில், தாங்கள் கொண்டு வந்த நோட்டீசை அதிகாரிகள் ஒட்டிவைத்து விட்டு சென்றனர். அதில், இன்னும் 2 மணி நேரத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையேதான், ப.சிதம்பரத்தை காணவில்லை, அவர் தலைமறைவாகிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பதிவுகள் உலா வருகின்றன.