சென்னை, ஆக.22: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு சிபிஐயால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் இன்று மதியம் அல்லது பிற்பகல் 3.30 மணியளவில் டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

நேற்று இரவு சிபிஐ தலைமையகத்தில் காவலில் வைக்கப்பட்டு இருந்த அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் காலை 9,45 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை விசாரணை நடைபெற்றது. இத்துடன் முதற்கட்ட விசாரணை முடிவடைந்து விட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007-ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது மும்பையை சேர்ந்த் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடிக்கு வெளிநாட்டு முதலீட்டை பெற்றது. இதில் முறைகேடு நடப்பதற்கும், இதற்கு பிரதி பலனாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனம் ஆதாயம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமினில் உள்ளார்.

டெல்லி நீதிமன்றத்தில் கைதுக்கு அவ்வப்போது தடை பெற்று வந்த ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை 2 நாட்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்ற போது அவர் அங்கு இல்லை,

நேற்று காலையில் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வில்லை. மதியம் மற்றும் மாலையில் விசாரணைக்கு எடுக்க ப.சிதம்பரத்தின் வக்கீல்கள் கபில் சிபல் மேற்கொண்ட முயற்சி தேல்வியடைந்தது. இதனையடுத்து ப.சிதம்பரம் எங்கிருக்கிறார்¢ என்பது தெரியாத நிலையில் அவரை தேடும் நபராக சிபிஐ அறிவித்தது. இதையடுத்து நேற்று இரவு 8.30 மணிக்கு திடீரென ப.சிதம்பரம் வக்கீல்கள் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புடைசூழ டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு வந்தார், அங்கு நிருபர்கள் மத்தியில் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் ஐஎன்எக்ஸ் ஊழல் வழக்கில் தன் மகனுக்கோ எனக்கோ எந்த தொடர்பும் இல்லை, நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது வக்கீல்களுடன் இங்குதான் இருக்கிறேன். இந்த வழக்கில் சிபிஐயோ அல்லது அமலாக்கத்துறையோ இது வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வில்லை. நானும், என் மகனும் தவறு செய்ததாக சில பொய்யர்கள் பொய் பரப்புகிறார்கள் என்றார்.

இந்த பேச்சு முடியம் வரை சுமார் அரைமணி நேரம் சிபிஐ அதிகாரிகள் காத்திருந்தனர். 8.30 மணிக்கு பேட்டியை முடித்துக்கொண்டு டெல்லியில் ஜோர்பார்க்கில் உள்ள தனது இல்லத்திற்கு ப.சிதம்பரம் விரைந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தின் வீட்டிற்குள் நுழைய முயன்ற போது கேட் பூட்டப்பட்டது. உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சில அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து அழைத்து சென்றனர்.

இரவு 9.40 மணிக்கு சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து ப.சிதம்பரத்தை பரிசோதித்தனர். பின்னர் வழக்கு தொடர்பாக அதிகாரிகள் சில கேள்விகளை கேட்டுள்ளனர். அப்போது ப.சிதம்பரம் நான் சட்டத்தை மதிக்கிறேன். நீங்களும் மதிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இன்று காலை சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர் படுத்துவதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களுக்காக இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சிபிஐ ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் எடுத்து நிதி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

டீ மட்டும் குடித்த ப.சி.

சிபிஐ அதிகாரிகள் இரவில் விசாரணை நடத்திய போது என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டதற்கு ஒன்றும் வேண்டாம். டீ மட்டும் போதும் என்று ப.சிதம்பரம் கூறியதாக தெரிகிறது.