ஆண்டிகுவா, ஆக.22:  இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்(விண்டீஸ்) அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் கிரிக்கெட் தொடராக கருதப்படுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

விண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே டி-20 மற்றும் ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடர், ஐசிசி இந்தாண்டு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி, இந்தியாவுக்கான முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் இந்திய வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவர்.

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மிரட்டுவார்கள். சுழலுக்கு அஸ்வின் இருக்கிறார். அதேசமயம், ஜாசன் ஹோல்டர் தலைமையிலான விண்டீஸ் அணியில் கேம்பல், ணாய் ஹோப், சேஸ், டோவ்ரிச் ஆகியோர் பேட்டிங்கிலும், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல் ஆகியோர் பவுலிங்கிலும் நல்லதொரு ஃபார்மில் உள்ளனர்.

சாதனை படைப்பாரா விராட்?
இந்த டெஸ்டில் விராட் கோலி சதம் அடித்தால், கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்வார். வெற்றி பெற்றால் டெஸ்டில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்த இந்திய கேப்டனான தோனியின் சாதனையை சமன் செய்வார்.