புதுடெல்லி, ஆக.22: இரவு முழுவதும் கண்விழித்து வக்கீல்களுடன் அமர்ந்து மனு தயாரித்ததால் தான் சிபிஐ அதிகாரிகளால் என்னை கண்டுப்பிடிக்க முடியாமல் தேடும் நபர் என அறிவித்து விட்டார்கள் என ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு 8.15 மணிக்கு ப.சிதம்பரம் திடீரென வந்த போது பரபரப்பு ஏற்பட்டது.

அவருடன் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அஹமது பட்டேல், குலாம்நபி ஆசாத், மல்லிகாஜூர்ன கார்கே, சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் அமைப்பு செயலாளர் வேணுகோபால் ஆகியோரும் வந்தனர். சிதம்பரம் நிருபர்களை சந்தித்த போது இந்த தலைவர்கள் அனைவரும் உடனிருந்தனர். இந்த தலைவர்கள் அனைவரும் வழக்கத்திற்கு மாறாக வேஷ்டி சட்டை அணியாமல், கருப்பு பேண்ட் வெள்ளை சட்டை அணிந்து இருந்தார்.

தன்னை காணாமல் போனவர் என்று அறிவித்ததில் இருந்து நடைபெற்ற சம்பவங்களை அவர் விளக்கிவிட்டு அறிக்கை ஒன்றை வாசித்தார். என்னை தேடிக்கொண்டு இருந்த நேரத்தில் இரவு முழுவதும் வக்கீல்களுடன் கண்விழித்து இருந்து மனு தயாரித்ததாகவும் அவர் தெரிவித்தார். நான் பொய் குற்றச்சாட்டிற்கு ஆளாகிவிட்டேன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் எப்ஐஆரில் கூட தவறுகள் நடந்ததாக குறிப்பிடவில்லை.

நான் எனது மனசாட்சிப்படி நடந்துகொள்வேன். சட்டத்தை நான் மதிப்பது போலவே விசாரணை அமைப்புகளும் மதிக்க வேண்டும். சட்டத்தின் கீழ் நான் பாதுகாப்பை தேடுகிறேன். நீதியில் இருந்து தப்பி ஓடமாட்டேன் என்றார். சுமார் 6 நிமிடங்கள் அறிக்கையை வாசித்தார். பின்னர் நிருபர்களை நோக்கி கையசைத்தாவாறே புறப்பட்டு சென்றார். காங்கிரஸ் தலைமையகத்திலும், ப.சிதம்பரத்தின் வீட்டின் முன்பும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கூடி நின்றனர்.

அவரை கைது செய்து அவரை அழைத்துசென்ற போது காரின் பின்னால் சிலர் ஓடினார்கள். சிதம்பரத்தின் கைதிற்கு ராகுல், பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மோடி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும், இந்த விஷயத்தில் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.