சென்னை, ஆக.22: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த நடிகை மதுமிதாவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்காக இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை போலீசார் மதுமிதாவின் வீட்டுக்கு செல்ல உள்ளனர்.

விஜய் டிவியில் கடந்த ஜூன் 23-ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக¤வருகிறது. இதில் சேரன், வனிதா, தர்ஷன், மதுமிதா உள்ளிட்ட 15 பேர் போட்டியாளர்களாக சென்றனர். கடந்த வாரம் திடீரென கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி நடிகர் மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் விஜய் டிவியின் சட்டத்துறை மேலாளர் பிரசாத் கிண்டி காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, நிகழ்ச்சியின் போது தன்னை காயப்படுத்திக் கொண்டதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 50-வது நாளில் வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ஒப்பந்தப்படி 15 நாட்களில் அவர் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் சம்பளம் பெற்றுக்கொண்டார்.

மீதிப்பணத்தை தருவதாக கூறியதற்கு அதை ஒப்புக்கொண்டு சென்றார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு மேலாளரான தீனாவின் செல்போன் வாட்ஸ்அப்பிற்கு கடந்த 19-ம் தேதி நடிகை மதுமிதா ஒரு செய்தி அனுப்பி உள்ளார். அதில் எனக்கு
பேசியப்படி பணம் தரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். நீங்கள் தரும்வரை காத்திருக்க முடியாது. என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என மதுமிதா குறும் செய்தியில் மிரட்டி உள்ளார்.

நிர்வாகத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் மதுமிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இது தொடர்பாக கிண்டி போலீசார் நடிகை மதுமிதா மீது வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்று அந்த தனிப்படை போலீசார் நடிகை மதுமிதா வீட்டுக்கு சென்று விஜய் டிவி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.