ஆண்டிகுவா, ஆக.23: வெ.இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸிலேயே இந்திய அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒருமுனையில், ரஹானே மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.

இந்தியா-வெ.இண்டீஸ் அணிகணீள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கவீரர் மயங்க் அகர்வால் (5), புஜாரா (2) மற்றும் கேப்டன் கோலி (9) ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்கள் ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். சரிவை நோக்கி சென்றுக்கொண்டிருந்த இந்திய அணியை, தொடக்க வீரர் கே.எல்.ராகுலுடன் (44), துணைக் கேப்டன் ரஹானே (81) பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்படி,

நேற்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (20), ஜடேஜா (3) ஆகியோர் களத்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில், கீமர் ரோச் 3 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சேஸ் ஒரு விக்கெட் எடுத்தார். இந்த நிலையில், இன்று இரவு 7 மணிக்கு 2-வது நாள் ஆட்டம் தொடங்குகிறது. இன்றைய ஆட்டத்திலாவது இந்திய அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.