சென்னை, ஆக.23: மரபணு சார்ந்த அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவனுக்கு நவீன சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பிரிட்டில் போன் எனப்படும் எலும்பு இறுக்க நோயானது, மரபணு சார்ந்த ஒன்றாகும்.

10 ஆயிரத்தில் ஒன்று அல்லது இருவருக்கு பிறப்பிலேயே இந்த வகையான பாதிப்பு ஏற்படுவது உண்டு. சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சரவணனுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது. பிறப்பிலேயே அது கண்டறியப்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முதல் 5 ஆண்டுகளுக்கு மருந்துகள், மாத்திரைகள் மூலமாக எலும்பு வலுவாக்கப்பட்டன.

அதற்கிடையே இரு முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டும், கால்களில் கம்பிகள் பொருத்தப்பட்டும் எலும்புகள் நேராக்கப்பட்டன. அதனுடன் பல்வேறு பயிற்சிகளும் அச்சிறுவனுக்கு அளிக்கப்பட்டன. அதன் பயனாக, தற்போது எந்த துணையும் இன்றி தாமாகவே அவர் நடக்கிறார். அவரது எலும்புகளின் ஸ்திரத்தன்மையும் சீராக்கப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்பின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தீன் முகம்மது இஸ்மாயில், பசுபதி சரவணன் , ராஜ் கணேஷ் , சுரேஷ்பாபு, சரத் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.