ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற ரொமாண்டிக் காமெடிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் அனுபாமா பரமேஸ்வரன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படம் குறித்து இயக்குனர் கூறியதாவது:- இந்தப் படத்தின் கதையும் அவரது பாத்திரமும் இதற்கு முன் அதர்வா நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

அனுபாமா பரமேஸ்வரன் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடிய வலுவான பாத்திரத்தில் தோன்றுகிறார். கிட்டத்தட்ட 96 படத்தில் த்ரிஷா ஏற்ற வேடத்தைப் போன்றது. மேலும் காளி வெங்கட், ஜெகன், வித்யுத்லேகா ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கி சுமார் இருபது நாட்கள் இந்த படப்பிடிப்பு இருக்கும்.

படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கபிலன் வைரமுத்து வசனங்களை எழுதுகிறார். ராஜ் குமார் கலையமைக்க, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார். மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன்ஸுடன் இணைந்து கண்ணன் தயாரிக்கிறார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படம் வெளியாக உள்ளது.