சென்னை, ஆக.24:  அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த அம்பதி ராயுடு, தனது முடிவை இப்போது மாற்றியுள்ளதாகவும், மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அதை மறுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு. இவருக்கு, உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி.வி.பார்த்தசாரதி டிராபிக்கான ஒரு நாள் தொடரில், விளையாடுவதற்காக சென்னை வந்துள்ள ராயுடு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், உலகக் கோப்பையில் விளையாட கடந்த 4 வருடங்களாகக் கடுமையாகப் பயிற்சி செய்து வந்தேன். நான் தேர்வு பெறவில்லை என்றதும் ஏமாற்றமடைந்தேன். இதனால், ஓய்வுக்கு இதுதான் சரியான தருணம் என நினைத்து அந்த முடிவை அறிவித்தேன். அது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்று கூற மாட்டேன். அதிகமாக எதிர் பார்த்திருந்த ஒன்று கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்டம் நோக்கி நகர்வதுதான் சரி என நினைத்து எடுத்த முடிவு.

இப்போது அதுபற்றி யோசிக்க நேரம் கிடைத்தது. இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என முடிவு செய்துள்ளேன். இதுபற்றி கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுத இருக்கிறேன். அதோடு ஐபிஎல் தொடரிலும் விளையாடுகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் எனக்கு ஆதரவளித்து வந்துள்ளது. அந்த அணி நிர்வாகமும் என்னிடம் பேசி வந்தது. கண்டிப்பாக அந்த அணிக்காக ஆடுவேன். நாட்டுக்காக ஆடும் வாய்ப்பு வந்தால் அதை மறுக்க மாட்டேன், என்றார்.