மர்ம பொருள் வெடித்து இரண்டு பேர் பரிதாப பலி

சென்னை

சென்னை/காஞ்சிபுரம், ஆக.26: திருப்போரூர் அருகே கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே உள்ள மானாபதி என்ற ஊரில் கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் நேற்று மாலை 3.30 மணியளவில் இளைஞர்கள் 6 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, திடீரென மர்மபொருள் ஒன்று வெடித்தது. பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, 6 பேர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசுக்கு தகவல் அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன், மகாபலிபுரம் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இன்ஸ்பெக்டர் ஐய்யநாரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அதில் இருவர் உயிரிழந்து கிடந்ததும், 4 பேர் படுகாயங்களுடன் கிடந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, படுகாயடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். காஞ்சியில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். வெடித்துள்ள கோயில் சுவரின் துண்டுகளை ஆய்வுக்காக சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், கூவத்தூர் அருகே உள்ள குண்டுமணிச்சேரியை சேர்ந்த மெக்கானிக் தொழில் செய்யும் சூர்யா (வயது 21) என்பதும், திருப்போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எலக்ட்ரீஷனாக வேலை பார்த்துவந்த திலிப் ராகவன் என்பது தெரியவந்தது.

படுகாயமடைந்தவர்கள், மானாபதியை சேர்ந்த திருமால் (வயது 24), ஜெயராமன் (வயது 25), யுவராஜ் (வயது 23), விஸ்வநாதன் (வயது 24) ஆகிய 4 பேர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்கள் அனைவரும் நண்பர்கள் என்றும், திலிப் ராகவனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக இந்த கோயிலுக்கு வந்துள்ளனர். நேற்று பகல் 12 மணியளவில் கோயில் அருகே கூடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

அப்போது, அங்கு கிடந்த மர்ம பொருளை எடுத்து பார்த்தபோது அது வெடித்ததாக கூறப்படுகிறது. கோயிலுக்கு அருகே அனுமந்தபுரத்தில் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டுவருவதால் அங்கிருந்து இந்த மர்ம பொருள் இங்கு வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த மர்ம பொருள், ராணுவத்தினரால் பீரங்கிக்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் என தெரிகிறது. அதிலுள்ள சீரியல் நம்பரை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

அல்லது சமீபத்தில் நடந்த கோயில் குளம் தூர்வாரும் பணியில் இந்த மர்ம பொருள் கிடைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.