புதுடெல்லி, ஆக.26: சிபிஐ தொடர்ந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதனிடையே முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஸ்திரியா, அர்ஜெண்டைனா, பிரான்ஸ் உட்பட 12 நாடுகளில் சொத்து குவித்திருப்பதாக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி முன்னிலையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனுவை ஜாமீன் மனுவாக ஏற்று ஜாமீன் வழங்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் அப்படி செய்ய இயலாது என்று கூறி அந்த மனுவை பானுமதி நிராகரித்தார்.

அவருக்கு போலீஸ் காவல் அளித்த நீதிமன்றத்தில் அதாவாது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தான் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்தார். இதனால் ப.சிதம்பரத்துக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை தகர்ந்து போனது. இதனிடையே அமலாக்கத்துறை விசாரணைக்காக ப.சிதம்பரத்தை கைது செய்யாமல் இருக்க 26-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இது இன்றுடன் முடிவடைவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில் சிதம்பரம் மற்றும் அவருக்கு வேண்டியவர்கள் வெளி நாடுகளில் சொத்துக்களை குவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா, அர்ஜெண்டைனா, பிரான்ஸ், பிரிட்டிஷ் வெர்ஜீன் ஐலாண்டு, மலேசியா, மொனாக்கோ, கிரீஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அவர்கள் சொத்து குவித்திருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என்னை மூளையாக செயல்பட்டவர் என்று கூறியிருப்பது சரியல்ல என்றும், அரசியல்ரீதியாக பழிவாங்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.