சென்னை, ஆக.27: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ கலவரத்தில் காவல்துறை, வருவாய்துறை, போராட்டகாரர்களின் பங்கு குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை குறித்து நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன் பேரில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை அறிக்கையை சிபிஐ இன்று தாக்கல் செய்தது. அதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 2018 ஆகஸ்ட் 14- ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதன் பேரில், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், சம்பவத்தில் அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 207 வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 16- ல் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அது கண்டிப்புடன் அமல்படுத்தப்படும். பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கலவரத்தில் காவல் அதிகாரிகளின் பங்கு, வருவாய் துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டகாரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து இன்று பிற்பகல் தெரிவிப்பதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.