சென்னை, ஆக.29: அண்ணாநகரை சேர்ந்த டாக்டரிடம் அஞ்சலகத்தில் போலி வைப்பு நிதி பத்திரத்தை கொடுத்து ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்மணியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- அண்ணாநகர் விரிவு, வி.ஆர்.நகரில் வசிப்பவர் ராஜகோபால் (வயது 74). மருத்துவரான இவர் அந்த பகுதியை சேர்ந்த தபால்துறை சேமிப்பு முகவரான பிரேமலதா (வயது 50) என்பவரிடம் கடந்த 2006-ம் ஆண்டே ரூ.35 லட்சத்து 88 ஆயிரத்தை அஞ்சலகத்தில் 10 ஆண்டு வைப்பு நிதியாக வைக்குமாறு கூறி பணத்தை கொடுத்துள்ளார்.

அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பிரேமலதா ஒரு ஆவணத்தை ராஜகோபாலிடம் தந்துள்ளார். தற்போது 10 ஆண்டுகள் முடிவடைந்ததையடுத்து கடந்த வாரம் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு சென்று அந்த ஆவணத்தை கொடுத்து பணத்தை கேட்டுள்ளார். அதை பார்த்த அஞ்சல் துறை அதிகாரிகள் இது போலியானது என கூறியுள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த மருத்துவர் உடனடியாக சிந்தாதிரிபேட்டை போலீசில் புகார் அளித்தார்.

உடனே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேமலதாவை வலைவீசி தேடினர். நேற்று சோளவரம் பகுதியில் அவர் மறைந்து இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று பிரேமலதாவை கைது செய்தனர்.