கோவை, ஆக.29: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் கோவையைச் சேர்ந்த ஐந்து பேரின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பின்னர் ஐந்து பேரையும் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து செல்போன்கள், லேப்டாப் மற்றும் துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு பாகிஸ்தானியர் உட்பட 6 தீவிரவாதிகள் தமிழகத்தில் புகுந்துள்ளதாக கடந்த சில நாட்களாக முன்பு எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக அவர்கள் கோவையில் ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சோதனை நடைபெற்றது. அப்போது எந்த தாஸ்தாவேஜ்களும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று கோவை, கோட்டைமேடு மற்றும் உக்கடம் பகுதியில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

கொச்சி மற்றும் கோவையைச் சேர்ந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை நடத்தினார்கள். சோதனை நடைபெற்றதை அடுத்து ஐந்து வீடுகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உமர் பாரூக், சனோபர் அலி, ஷமீனா முபின், சதாம் உசேன், முகமது யாசீர் ஆகியோர் வீடுகளிலும் மற்றும் குடிசை மாற்று குடியிருப்பு ஒன்றிலும் சோதனை நடைபெற்றது.

ஐ.எஸ். சித்தாந்தத்தை பரப்பியதாகக் கூறி கடந்த மே மாதம் கோயம்புத்தூரில் இருந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்த 6 பேரில், சந்தேகத்திற்கிடமான தலைவரான முகமது அசாருதீன் (32), இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாஷிமின், பேஸ்புக் நண்பர் மற்றும் ஒய்.ஷீக் ஹிதயதுல்லா ஆகியோரை என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உமர் பாரூக், சனாபர் அலி, ஷமீனா முபின், முகமது யாசீர், சதாம் உசேன் ஆகியோரது வீடுகளில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கும் தமிழகத்தில் புகுந்த தீவிரவாதிகளுடன் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள்.

ஏற்கனவே இவர்கள் அனைவரும், இதற்கு முன்னும் மத்திய தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் சிக்கி விசாரணைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கோவை உக்கடம், வின்சென்ட் ரோட்டை சேர்ந்த ஜனாபர் அலி என்பவரது வீட்டில் முதன் முறையாக சோதனை நடைபெற்றதாக தெரிகிறது.

காலை 10 மணியுடன் சோதனை முடிவடைந்தது. அவர்களிடம் இருந்து ஒரு லேப்டாப், ஏழு செல்போன்கள், பென் டிரைவ், துண்டுப் பிரசுரங்கள், அரபு மொழியில் எழுதப்பட்ட புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்துக்கு நாளை விசாரணைக்கு வருமாறு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.