சென்னை, ஆக.29: தமிழகத்தின் மதுரை மாநகரில் உள்ள மகாத்மா மான்டிஸரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவியான ஜே தான்யா தஸ்னம் வரும் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார். அங்கே அந்நாட்டின் நாசா எனப்படும் அமெரிக்க வான்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு நிர்வாகத் தலைமையகத்தில் ஒரு வாரம் வரை செலவிட இருக்கிறார். அப்போது நாசாவை முழுமையாகச் சுற்றிப் பார்க்கவும், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவுமான வாய்ப்பினைப் பெறுவார்.

இணையம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்வது போன்ற சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க நிறுவனமான கோ4குரு 2019-ம் ஆண்டு இந்திய அளவில் நடத்திய அறிவியல் ஆப்டிட்டியூட் மற்றும் பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற 3 பேரில் தான்யா தஸ்னமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவை சேர்ந்த ஐ.ஐ.டி. அறக்கட்டளைப் பள்ளி மாணவி சாய் புஜிதா மற்றும் மராட்டியம் ஜிண்டால் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவன் அபிஷேக் ஷர்மாவும் தேர்வாகி உள்ளனர்.