ரியோடிஜெனீரோ, ஆக.30: உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இளவேனிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில், 251.7 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை இளவேனில் வென்றார்.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை 20 வயதான இளவேனில் பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், கடலூரில் பிறந்தவர். எனினும் தற்போது குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தங்கப்பதக்கம் வென்ற இளவேனிலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.