ஹாங்காங், ஆக.30: ஹாங்காங் போராட்டத்தை வழிநடத்தி வரும் சமூக ஆர்வலர் ஜோஸ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்த ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்காரர்கள் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி ஜனநாயக ஆதரவாளர்கள் லட்சக்கணக்கானோர் தொடர்ந்து 81 நாட்களாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அமைதியான முறையிலேயே போராட்டங்கள் நடந்த போதும் தொடர் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

கடந்த 24-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மாபெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் மறியல் போராட்டம் நடத்தினர். இதுவரையில் 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று சுமார் 10,000 சீன ராணுவ வீரர்கள் ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹாங்காங்கின் பிரபல சமூக ஆர்வலரான ஜோஸ்வா வாங் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது ஜனநாயக சார்பு குழு தெரிவித்துள்ளது. அவருடன் உறுப்பினரான அகின்ஸ் சோவ்வும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.