புதுடெல்லி, ஆக.30: இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் இன்று காஷ்மீருக்கு செல்கிறார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள், ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பாலும் விலக்கி கொள்ளப்பட்டன. தொலைபேசி இணைப்புகளை மீண்டும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஆனால் காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. அங்கு செல்போன், இணையதள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளன. வாகன இயக்கம், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே உள்ளன.

காஷ்மீர் வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளின் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் இன்று முதல் முறையாக ராணுவ தளபதி பிபின் ராவத் காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார். பின்னர் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.