புதுடெல்லி, ஆக.30: நாடு முழுவதும் இந்திய மருத்துவ சிகிச்சை அளிக்கும் 12,500 ஆயுஷ் மையங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இந்த ஆண்டு 4 ஆயிரம் மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே வரி வரிசையில் ஒரே மருத்துவ அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

புதுடெல்லி விஞ்ஞான்பவனில் நடந்த யோகா விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன் கார்டு என்ற வரிசையில் இந்திய மருத்துவ முறைகளை இணைத்து ஆயுஷ் என்ற ஒரே அமைப்பாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதில் அனைத்து இந்திய மருத்துவமுறைகளும் கொண்டு வரப்படும்.

நமது பாரம்பரிய மருத்துவமுறையுடன் தொழில்நுட்பத்தை இணைப்பது மிகவும் அவசியம். ஆயுஷ் மருத்துவத்தில் பணியாற்ற ஏராளமான பணியாளர்கள் தேவை. இதை நோக்கி அரசு நகர்ந்து வருகிறது. நாடுமுழுவதும் 12,500 ஆயுஷ் மையங்கள் உருவாக்கப்படும். இந்த ஆண்டிலேயே 4000 ஆயிரம் மையங்கள் உருவாக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரே மருத்துவ அட்டை கொண்டு வருவதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தவிர்க்கப்படும்.

இந்த மையங்கள் மூலம் மக்கள் தங்களுடைய மருத்துவ தேவைகளை தாங்களே புர்த்தி செய்ய முடியும்.

நல்ல உணவு பழக்க வழக்கங்களையும் அவர்கள் இதன் மூலம் கடைபிடிப்பதற்கு வகையேற்படும்.

மகாத்மா காந்தி இயற்கை வைத்திய முறையை கடைபிடித்தார். நமது நாட்டில் ஆயுர்வேதா மற்றும் யோகாவின் பயன்கள் குறித்த ஏராளமான குறிப்புகள் உள்ளன.

நான் என்னுடைய வாழ்க்கையில் யோகாவையும், ஆயுர்வேத மருத்துவத்தையும் முழுமையாக பயன்படுத்துகிறேன்.

ஃபிட் இந்தியா இயக்கத்தை துவக்கி வைத்த மறுநாளே ஆயுஷ் மற்றும் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எதிர்பாராமல் அமைந்த ஒற்றுமையாகும்.
இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுஷ் மருத்துவத் துறையில் சிறந்து விளங்கிய 12 நிபுணர்களின் நினைவாக சிறப்பு தபால் தலைகளை பிரதமர் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

அரியானாவில் ஆயுஷ் சுகாதார மற்றும் நல மையத்தை பிரதமர் துவக்கி வைத்தார். 12,500 ஆயுஷ் மையங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும்.

ஆயுஷ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆரோக்கியமான உணவுமுறை, மருத்துவ முறைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தங்களை சுகாதாரமாக வைத்திருக்க இந்த மையங்கள் உதவும்.