சென்னை, ஆக.30: வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு வந்த பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு ரூ.1 கோடியில் நடிகர் ரஜினிகாந்த் புதிய வீடு வாங்கி கொடுத்துள்ளார்.

சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளரான கலைஞானத்துக்கு சமீபத்தில் திரையுலகினர் பாராட்டு விழா நடத்தினர். அதில் பிரபலமான நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகுமார், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சிவகுமார் பேசியபோது, ‘கலைஞானம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ‘அந்த வாய்ப்பை அரசுக்கு தரமாட்டேன். விரைவாக கலைஞானம் அவர்களுக்கு வீடு பாருங்கள். 10 நாட்களுக்கு பணத்தை தருகிறேன்’ என்று கூறினார்.

இதனையடுத்து இயக்குனர் பாரதிராஜா, கலைஞானத்திற்கு ரூ.1 கோடி மதிப்பிலான வீடு பார்த்தார். ரஜினி மொத்த பணத்தையும் அளித்து அந்த வீட்டை கலைஞானத்துக்கு பெற்று கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கலைஞானம் கூறுகையில், ‘ரஜினிக்கும் எனக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. அவருடைய முதல் பட வாய்ப்பை நான் அளித்தேன். அவ்வளவுதான். ஆனா எனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்பவர் ரஜினியின் மனசை வெளிப்படுத்துகின்றது’ என்று பாராட்டினார்.

ஏற்கனவே ரஜினி நடித்து பெரிய வசூலை பெற்ற அருணாச்சலம் திரைப்படத்தில் லாபத்தை வி.கே.ஆர், பண்டரிபாய், கலைஞானம், எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் சத்யா ஸ்டுடியோ பத்மநாபன் ஹேம்நாக், என ஆறுபேருக்கு குறிப்பிட்ட தொகை தருவதாக சொன்னார் ரஜினி. எல்லோருக்கும் என்ன தொகை சொன்னாரோ அதைவிட இரட்டிப்பாக வழங்கி கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.