சான் பிரான்ஸிஸ்கோ, ஆக.31: பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரின் சிஇஒ ஜேக் டோர்சியின், டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேக் டோர்சியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து திடீரென இனவெறி கருத்துக்களும், நாஜி ஜெர்மனிக்கு ஆதரவான கருத்துக்களும் பதிவிடப்பட்டன. ஜேக்டோர்சியை பின் தொடரும் லட்சக்கணக்கான வலைத்தள வாசிகளுக்கு கடும் அதிர்ச்சியை இந்த பதிவு ஏற்படுத்தியது. இந்த பதிவுகள் சிறிது நேரத்தில் நீக்கப்பட்டு விட்டன.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ஜேக் டோர்சியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது. ஆனால் நிறுவனத்தின் பாதுகாப்பு அமைப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. டுவிட்டர் கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த மொபைல் எண் மூலமாக ஹேக் செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.