சென்னை, ஆக.31: டிவி சீரியல் நடிகரின் தந்தை அரும்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மர்மசாவு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 40). இவர், டிவி சீரியல் நடிகராக உள்ளார். இவரது தந்தை விட்டல் திகார் ராவ் (69). இவர் தனது மனைவியுடன் ஆற்காடு சாலை விருகம்பாக்கத்தில் வசித்துவந்துள்ளார்.

இவரது மனைவி, கடந்த 26-ம் தேதி கும்பகோணத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அதிகாலை 2.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, வாயில் ரத்தம் கசிந்த நிலையில், விட்டல் திகார் ராவ் கட்டிலின் மீது மர்மமான முறையில் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற விருகம்பாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.