பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படம் தியேட்டரில் வெளியான சில மணி நேரத்தில் இணைய தளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிதாக திரைக்கு வரும் படங்கள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. தியேட்டர்களுக்கு கேமரா கொண்டு செல்ல தடைவிதித்தனர். கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டன.

அதையும் மீறி ஹாலிவுட் படங்களும் தமிழ், தெலுங்கு படங்களும் தியேட்டர்களில் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே இணையதளத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை, ஜெயம் ரவியின் கோமாளி ஆகிய படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது.

இந்த நிலையில் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மந்திரா பெடி ஆகியோர் நடித்து நேற்று திரைக்கு வந்த ‘சாஹோ’ முழு படத்தையும் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரத்திலேயே திருட்டுத்தனமான இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் 2.0 படத்துக்கு அடுத்தபடியாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் சாஹோ தயாரானதாக கூறப்பட்டது. சண்டை காட்சிகளுக்கு மட்டும் ரூ.70 கோடி செலவிட்டு இருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் தயாராகி உள்ளது. இணையதளத்தில் வெளியானதால் வசூல் பாதிக்கும் என்று படக்குழுவினர் அஞ்சுகின்றனர்.