கிங்ஸ்டன், செப்.1:  கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டம போட்டியில் யார்க்கர் புயல் பும்ரா ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி உள்ளார். விஹாரி மற்றும் இஷாந்த் சர்மாவின் அபார பேட்டிங்கால் அசத்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி ஏறகனவே முதல் டெஸ்ட் போட்டியில் வென்றுள்ள நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டு இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிய விஹாரி 111 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை எடுத்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய இஷாந்த் சர்மா 57 ரன்கள் குவித்து தனது முதல் அரைசதத்தை எடுத்து அசத்தினார். முதல் இன்னிங்சில் இந்தியா 416 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பும்ராவின் புயல் வேகத்தில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து தடுமாறியது. பும்ரா தொடர்ந்து 3 பந்துகளில் டேரன் பிராவோ (4), புரூக்ஸ் (0), சேஸ் (0) ஆகியோரை வெளியேற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை நிகழ்த்தினார்.

ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இதன் மூலம் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3-வது இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக ஹர்பஜன் சிங், இர்பான் பதான் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.