லாஸ் ஏஞ்சலஸ், செப்.3: அமெரிக்காவில் சுற்றுலா படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் காணாமல் போன 26 பேரின் நிலை தெரியவில்லை.

கலிபோர்னியாவின் தெற்கே சான்டா குரூஸ் தீவின் கடலோர பகுதியில் 75 அடி நீள சுற்றுலா படகில் சுற்றுலாவாசிகள் ஸ்கூபா டைவிங்கிற்காக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், படகு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து கொண்டது. இதனால் படகின் கீழ் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர். கொளுந்துவிட்டு எரிந்த நெருப்பின் கடும்வெப்பத்தால் படகின் அருகே நெருங்கி மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அடர்பனி மேலும் நிலையை மோசமானதாக மாற்றியது.

படகில் பயணம் செய்த 39 பேரில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 26 பேரை காணவில்லை. படகை செலுத்திய 5 பேர் மட்டும் கடலில் குதித்து தப்பியுள்ளனர்.