ரியோ டி ஜெனீரோ, செப்.3: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில், இந்திய ஜோடி தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை வாரி குவித்து, பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வருகிறது. 26-ம் தேதி தொடங்கிய இப்போட்டி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நேற்று நடந்தன. இதில், 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற இரு அணிகளும் முதல் மற்றும் மூன்றாம் இடங்கள் பிடித்தன.

அதன்படி, இந்தியாவின் அபூர்வி சண்டிலா-தீபக் குமார் இணை தங்கம் வென்றது. இதேபிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற மற்றொரு இணையான அன்ஜூம் மவுட்கில் மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வார் இணை வெண்கல பதக்கத்தை வென்றது. இரண்டாம் இடம் பிடித்த சீன ஜோடிகள் வெள்ளி பதக்கத்தை வென்றன. இதேபோல், நேற்று நடந்த 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய இணைகள் பதக்கங்களை தட்டி த்தூக்கின.

இந்த பிரிவில்வின் இணைகளான மனு பாக்கர் – சவுத்ரி சவுரப் மற்றும் யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் – அபிஷேக் வர்மா இணைகள் இடையே பலப்பரீட்சை நிலவின. முடிவில், மனுபாக்கர் – சவுத்ரி இணை 17 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. மற்றொரு இந்திய இணையான யாஷாஸ்வினி சிங் தேஸ்வால் – அபிஷேக் வர்மா இணை 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. சீன இணை வெண்கலம் வென்றது.

இதன்மூலம், 5 தங்கம், 2 வெண்கலம், 2 வெள்ளி பதக்கங்கள் என மொத்தம் 9 பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.