சென்னை, செப்.3: தமிழக பிஜேபி தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கான போட்டியில் பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எல். கணேசன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, ஏ.பி.முருகானந்தம், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 8 பேர் உள்ளனர். அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் புதிய தலைவர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

தமிழக பிஜேபி தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பதவிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது குறித்து கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.

ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச்.ராஜா. எல்.கணேசன், முருகானந்தம், கே.டி.ராகவன் உள்ளிட்ட 8 பேர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இப்போது தலைவராக நியமிக்கப்படுவர் இடைக்கால தலைவராகவே இருப்பார் என்றும், அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

எனினும் இடைக்கால தலைவராக நியமிக்கப்படுபவரே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால் மேலிட தலைவர்களுடன் தமிழக பிஜேபி தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் பதவிக்கு போட்டி அதிகமாக இருக்கும் பட்சத்தில் செயல் தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து டெல்லி கட்சி வட்டாரத்தில் கூறுகையில் தலைவர் பதவி கேட்டு மேலிடத்தில் பேரம் பேச முடியாது. கட்சி நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி இறுதி முடிவை எடுப்பார். தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. அதற்காக அனைவரும் காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டது.