சென்னை, செப்.4: மெரினா கடற்கரையில் அமர்ந்திருந்த வாய் பேச முடியாதவரிடம், போலீஸ் என்று கூறி மிரட்டியதுடன் அவரை அடித்து பணம் பறிக்க முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). வாய் பேச முடியாத இவர், நுங்கம்பாக்கம் இருசக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக வேலை பார்த்துவருகிறார். நேற்றிரவு 8.15 மணியளவில் நேதாஜி சிலை பின்புறம் உள்ள மெரினா கடற்கரை மணலில் அமர்ந்து, வாய் பேச முடியாத தனது தோழியிடம் சைகை மூலம் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது வந்த மர்மநபர், தான் போலீஸ் எனக்கூறி கார்த்திக்கிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார். அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்ட கார்த்திக்கை, அந்த நபர் அடித்துள்ளார். சத்தம்கேட்டு திரண்ட பொதுமக்கள், அந்த நபரை மடக்கிபிடித்து, அங்கு ரோந்து பணியில் இருந்த மெரினா போலீசில் ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த தியாகராஜன் (வயது 36) என்பதும், தி.நகரில் உள்ள ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்துவருவதும் தெரியவந்தது.