மும்பை, செப்.4:  மும்பையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில், அந்நகருக்கு இந்திய வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை நகரில் கடந்த ஒரு மாத காலமாகவே பரவலாக கனமழை பெய்தது. சிறிது நாட்கள் இடைவெளி விட்டு, தற்போது மீண்டும் வெளுத்துக்கட்ட தொடங்கியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், மும்பையில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மும்பையின் பெரும்பாலான பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி (நாளை) கனமழை பெய்யும்.

செப்.,6 முதல் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் விடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. 64.5 மி.மீ., முதல் 115.5 மிமீ., கனமழையும், 115.6 மி.மீ., முதல் 204 மி.மீ., வரை கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மும்பை நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பிற பகுதிகளுக்கும் இதே போன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்கர், ராய்கட், ரத்னகிரி,சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழைக்காரணமாக மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.