ஹாங்காங், செப்.5: ஹாங்காங்கில் இருந்து கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தவும், அங்கு வழக்கு விசாரணையை சந்திக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் அரசு நிர்வாகம் முடிவெடுத்தது.

இந்த சட்ட திருத்த மசோதாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். என வலியுறுத்தி இரு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டங்களை அடக்க முப்படைகளைச் சேர்ந்த பத்தாயிரம் வீரர்கள் முற்பட்ட போதும் போராட்டக்காரர்களை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.