ராஜ்கோட், செப்.5: குஜராத்தில் தனது சொந்த ஜீப்புக்கு தானே தீ வைத்து அதனை வீடியோவாக வலைதளத்தில் பதிவிட்ட உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ராஜ்கோட் நகரின் சாலையோரம் ஒரு ஜீப் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஏராளமான நகைகள் அணிந்த ஒருவர், ஜீப் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு ஹீரோ போல ஸ்டைலாக நடந்து செல்கிறார். இந்த வீடியோவின் பின்னணியில் பஞ்சாபி பாடலை இணைத்து வெளியிட, அது வைரலாகி உள்ளது.

இதை அடுத்து, பக்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரஜித் சிங் ஜடேஜா (வயது 33). அவரது நண்பர் நிமேஷ் கோயல் (வயது 28) ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்திரஜித் சிங் ஜடேஜா (33) தனது சொந்த ஜீப் என்ஜின் சரியாக இயங்காத கோபத்தில் அதனை சாலையோரத்தில் நிறுத்தி கொளுத்தி உள்ளார். அவரது நண்பரான கோயல் செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அவர்கள் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக நெருப்பை கையாண்டதாக ஜடேஜா, கோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.