புதுடெல்லி, செப்.5: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007-ம் ஆண்டில் ரூ.305 கோடி அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்குகள் சரியான பாதையில் செல்படுவதாக கூறிய நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். இப்போது முன்ஜாமீன் வழங்கினால் விசாரணையை பாதிக்கும் என்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் தெரிவித்தனர்.

முன்ஜாமீன் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்று கூறி அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விசாரணை நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர்.

மேலும், விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ப.சிதம்பரத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் கடந்த 15 நாட்களாக சிபிஐ விசாரணைக் காவலில் இருக்கிறார். அந்த காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக அவரை அமலாக்கத்துறையும் கைது செய்ய தயாராகி வருகிறது.