அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரனுக்கு பாராட்டு

சென்னை

சென்னை, செப்.5: மத்திய அரசால் அர்ஜூனா விருது பெற்ற பாடிபில்டர் எஸ்.பாஸ்கரனுக்கு இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தியாவில் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் மிகச்சிறந்த விருதான அர்ஜூனா விருது 20 ஆண்டுகள் கழித்து பாடிபில்டிங் துறைக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை பெற்று தந்த எஸ்.பாஸ்கரனை பாராட்டும் விதமாக இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பாடிபில்டர்ஸ் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும், உலக உடற்கட்டமைப்பு, உடலமைப்பு விளையாட்டு கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான சேத்தன் பதாரே கலந்து கொண்டு பாஸ்கரனை கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், பாஸ்கரனின் சாதனை குறித்து ஐபிபிஎப் சார்பாக நாங்கள் பெருமை கொள்கிறோம், 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஸ்கரனுக்கு கிடைத்த இந்த விருது அவரின் தொடர் முயற்சி மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு, அவரது ஒழுக்கம் மற்றும் உறுதியான உடற்தகுதி தான் தாய்லாந்தில் நடைபெற்ற 10-வது மிஸ்ட்ர் வேர்ல்டு சாம்பியன் ஷிப் மற்றும் புனேவில் நடைபெற்ற மிஸ்டர் ஆசியா சாம்பியன் ஷிப்பில் தங்க பதக்கம் பெற தூண்டியது என்றார்.