அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம்: செங்கோட்டையன்

TOP-5 தமிழ்நாடு

சென்னை, செப்.5: தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வருவது தமிழக மக்களின் நலனுக்காக தான் என்றும், தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் மாணவர்கள் படிக்கும்போதே தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பின்லாந்து நாட்டின் கல்விச் சூழல், மாணவர்களின் திறன் மற்றும் கற்கும், கற்பிக்கும் முறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு ஒருவார அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பின்லாந்து நாட்டில் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் வகையிலும், சமூகத்தில் சிறந்த அந்தஸ்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அங்கு உயர் நிலைக் கல்வி படிக்கும் மாணவர்கள் படிக்கும் போதே தொழிற்சாலைகளுக்குச் சென்று தொழிற்கல்வியைக் கற்றுக் கொள்கின்றனர். இதனால், 18 வயது பூர்த்தியடைந்தவுடன் பெற்றோரின் துணையின்றி அந்த மாணவர்களால் சுயமாக வாழ முடிகிறது.

இதேபோல், தமிழக மாணவர்களிடையே தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் தமிழக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பின்லாந்தில் உள்ள தமிழ் நூலகத்திற்கு வரும் 15 நாட்களுக்குள் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும், மேலும் தமிழக பள்ளிகளில் புதிய பாடத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தங்களும் அங்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் வேலை வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகளுக்குச் சென்று பணியைக் கற்றுக் கொள்ளவும், படித்து முடித்ததும் அதே தொழிற்சாலைகளில் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான். இத்தகைய வெளிநாட்டு பயணங்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், நல்ல பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கும், தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்கான தாகவே அமையும்.

இதை அரசியல் ஆக்குவது தவறு. இதை சுற்றுலா செல்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது கண்டிக்கத்தக்கது, என்றார்.