விலாடிவோஸ்டாக், செப்.5:  கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் 3 நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விலாடிவோஸ்டாக் சென்றுள்ள பிரதமர் மோடி, மலேசிய நாட்டு பிரதமர் மகாதிர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மங்கோலியா நாட்டு அதிபர் ஆகியோரை இன்று சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவை சந்தித்தார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி அளித்தனர்.

மலேசியா நாட்டு பிரதமர் மகாதிர் பின் முகமதை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்தும் அவருடன் பிரதமர் மோடி விவாதித்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக விஷம் கக்கும் வகையில் உரை நிகழ்த்தி வரும் ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா புகலிடம் கொடுத்திருப்பது குறித்து பிரதமர் மோடி மலேசிய பிரதமரிடம் எடுத்துரைத்தார் என்றும், இந்த பிரச்சனையில் இரு நாடுகளும் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவு செய்யப்பட்டதாகவும் வெளியுவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியாவுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மலேசியா இதுவரை இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாகிர் நாயக் இந்தியாவில் விஷம் கக்கும் வகையில் பேசியதை தொடர்ந்து 2017-ல் அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் மலேசியாவில் தங்கியிருக்கிறார்.