திருவனந்தபுரம், செப்.6:  தேர்தல் நடத்துவது ஒன்றே புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி என்று நாடாளுமன்ற உறுப்பினரும் கேரள காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த பலத்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், கட்சியின் இடைக்காலத் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற சோனியா காந்தி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அஜய் மக்கான், ஜெய்பிரகாஷ் அகர்வால், யோகானந்த சாஸ்திரி உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

இந்த நிலையில், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரள காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூர், காங்கிரஸ் தலைவரை தேர்தெடுக்க தேர்தல் நடத்துவது ஒன்றே வழி என்று கூறி உள்ளார்.

அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், ஜனநாயகத்தில் உள்ள நாம் ஜனநாயக விரோத கட்சியாக இருக்க முடியாது. கட்சியின் தலைவராக அனைவரின் ஒருமித்த தேர்வாக இருக்கும் ராகுல் காந்தி, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய மறுத்து வருகிறார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. எங்கள் கட்சியில் தலைவர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்றார்.