புதுடெல்லி, செப்.6: முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் நேற்று முதல் முறையாக நாட்டின் புகழ்பெற்ற திகார் சிறையில் சிறைவாசத்தை அனுபவித்தார்.

அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அதே 7வது சிறை வளாகத்தில் 15-ம் நம்பர் அறையில் ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரம், நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிஐ காவல் முடிந்ததை அடுத்து, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், டெல்லியில் உள்ள பாதுகாப்பு மிகுந்த ஆசியாவின் மிகப்பெரிய ஜெயிலான திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்து 35 நிமிடங்களில் ப.சிதம்பரம் இருந்த வாகனம் திகார் சிறையை சென்றடைந்தது.

அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து தொலைக்காட்சி பத்திரிகையாளர்களும் வாகனங்களில் பின்தொடர்ந்தனர். அவர்கள் பின்னால் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வக்கீல்களுடன் வந்து கொண்டிருந்தார். திகார் சிறையின் 4-வது வாயிலின் வழியாக ப.சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார்.

ப.சிதம்பரத்தின் முகத்தை ஒரு காகிதத்தால் உடன் வந்த அதிகாரிகள் மறைத்தனர். திகார் சிறைக்கு அவர் வந்ததும் சிறை அதிகாரிகள் பொறுப்பேற்றுக்கொண்டு அவரை சிறைக்கு உள்ளே அழைத்து சென்றனர். ப.சிதம்பரம் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் எந்த நேரத்திலும் அவர் திகார் சிறைக்கு அழைத்து வரப்படலாம் என்பதால் சிறை அதிகாரிகள் முன்கூட்டியே அந்த அறையை தயார் செய்து வைத்திருந்தனர். அஙகு 7-வது சிறை வளாகத்தில் உள்ள 15-ம் நம்பர் தனி அறையில் ப.சிதம்பரம் நேற்று மாலை அடைக்கப்பட்டார். பொதுவாக இந்த அறை பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி கைது செய்யப்படும் முக்கிய பிரமுகர்கள் அடைக்கப்படுவது வழக்கம். மத்தியப்பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் உறவினர் ரதுல்புரி, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மைக்கேல் போன்றவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இதே வளாகத்தில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் அங்கு 12 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். அதே வளாகத்தில் தனி அறையில் தற்போது ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டு உள்ளார். ப.சிதம்பரம் அவருடைய மூக்கு கண்ணாடியை எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ப.சிதம்பரத்துக்கு தனி அறை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க அவர் மேற்கத்திய கழிவறையை பயன்படுத்த முடியும் என்றும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மற்ற கைதிகளைப் போலவே பொது நூலகத்தை அவர் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட நேரத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அவர் காண முடியும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

நேற்றிரவு அவருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் சாப்பிட்டார்.

மற்ற கைதிகளைப் போலவே நேற்றிரவு ப.சிதம்பரம் வெறும் தரையில் படுத்துறங்கினார். அவருக்கு ஒரு தலையணையும், தரை விரிப்பும் கொடுக்கப்பட்டது. கீழே படுத்து அனுபவம் இல்லாத சிதம்பரம், தூக்கம் வராமல் நெடுநேரம் தவித்துள்ளார்.

இன்று காலையில் அவருக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. மதிய உணவாக அவருக்கு சப்பாத்தி, காய்கறிகள், பருப்பு, அரிசி சாதம் ஆகியவை வழங்கப்பட்டன.

மதிய உணவு நேரம் பகல் 11.30 முதல் 12.30 வரை. 3,30 மணிவரை அவர் சிறையில் அடைக்கப்படுவார். 3.30 மணிக்கு பிறகு அவர் சிறையில் இருந்து வெளியே வந்து நூலகத்துக்கு செல்லலாம். அல்லது வேறு ஏதாவது விளையாட்டில் பங்கேற்கலாம். 6,45 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும். 9 மணி வரை அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார். பிறகு அவர் தனது அறைக்கு செல்ல வேண்டும்.

சிறையில் பிறந்த நாள்

ப.சிதம்பரம் வரும் 19-ம் தேதி வரை திகார் சிறையில் இருப்பார். இதற்கிடையே அவரது பிறந்தநாள் செப்டம்பர் 16-ல் வருகிறது. ஆனால் அவர் வெளியே வர முடியாது. எனவே தன்னுடைய 74-வது பிறந்தநாளை அவர் சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலை உள்ளது.