சென்னை, செப்.6: ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பால் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் என உயர்த்தி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து கடந்த 19ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனியார் பால் நிறுவனத்தின் பால் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் ஆவின் பாலை மட்டும் நம்பியுள்ளனர். அரசியல் லாபத்துக்காக செலவிடும் பெருந்தொகையை மக்களின் தலையில் சுமத்தும் வகையில் இந்த விலையேற்றம் உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாயி பிரச்சனைகளுக்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு விலையை உயர்த்தினால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், டாஸ்மாக் கடைக்கு செல்பவர்களை திசை திருப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என மனுதாரரிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.

எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்த நிலையில், மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதையேற்றுக் கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.