சென்னை, செப்.6: வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரை ஏமாற்றிவிட்டு, ரூ.33,000 பணத்துடன் தலைமறைவான ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். திருத்தணியை சேர்ந்தவர் நவீன் (வயது 21). இவர், பி.காம் படித்து முடித்துள்ள நிலையில், வேலை இல்லாமல் இருந்துவந்துள்ளார். வேலை தேடி அவ்வப்போது சென்னைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, மோகன் (வயது 56) என்ற நபர் நவீனுக்கு அறிமுகமாகியுள்ளார். பாரிமுனையில் உள்ள தேசியமாகக்கப்பட்ட வங்கியில் தான் வேலை பார்த்துவருவதாக கூறியதுடன், நவீனுக்கும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.35,000 பணம் கேட்டுள்ளார், மோகன்.

இதனை நம்பிய நவீனும், மோகன் அறிவுறுத்தியபடி பணத்தை எடுத்துக்கொண்டு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே அவரை சந்தித்து பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு மோகன், அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுவருவதாக கூறி, தலைமறைவாகியுள்ளார். இது குறித்து நவீன் அளித்த புகாரின்பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகனின் செல்போன் நம்பர், சிசிடிவி கேமரா பதிவை கொண்டு அவரை தேடிவருகின்றனர்.