சென்னை, செப்.6: பைக் மீது கழிவுநீர் லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.  அனகாபுதூரை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 22). இவர், பெருங்குடி அருகே உள்ள கந்தன்சாவடியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துவந்துள்ளார்.

நேற்றிரவு வழக்கம்போல் பணிமுடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். இரவு 9.30 மணியளவில், துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி, இவரின் பைக் மீது மோதியுள்ளது. இதில், தூக்கிவீசப்பட்ட சஞ்சய் படுகாயடைந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார். படுகாயமடைந்த சஞ்சையை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சஞ்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மேடவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.