புதுடெல்லி, செப்,6: நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் (காங்.) மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகி விட்டதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். விக்கிரவாண்டி சட்டமன்ற திமுக உறுப்பினராக இருந்த ராதாமணி மரணம் அடைந்தார்.

இதனால் இந்த இரு தொகுதிகளும் காலியாக இருக்கின்றன என ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளில் நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் நவம்பர் 2-வது வாரத்துக்குள் சட்டமன்ற தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும். இந்த 3 மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் நடக்கும் போது தமிழகத்தில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகார சத்ய பிரதா சாஹூ கூறுகையில், இடைத்தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை என்றார். 2 இடைத்தேர்தல் முடிவானது 2021-ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் எதி ரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த தொகுதிகளை கைப்பற்றுவதில் அதிமுக , திமுக இடையே கடும் போட்டி ஏற்படும். நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் வென்றிருக்கிறது என்றாலும் அதிமுகவுக்கு கடும் போட்டியை கொடுப்பதற்காக திமுக போட்டியிடும் என கூறப்படுகிறது. இந்த தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்குமா? என்பது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் தெரியும்.