பெங்களூரு, செப்.7: சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கிய நிலையில், அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ல் விண்ணில் ஏவப்பட்டது. முதலில் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம் பின்னர் 5 சுற்றாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை எட்டியது. அதன்பின்னர் 5 சுற்றாக ‘சந்திரயான்-2’ விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து கடந்த 2-ம் தேதி விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரத் தொடங்கியது. பின்னர் இரு முறை உள் உந்து விசையை பயன்படுத்தி லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, மெதுவாக நிலவை நெருங்கியது.

இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று அதிகாலை 1,30 மணிக்கு தொடங்கியது. விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் வருவது நின்று விட்டது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், லேண்டரில் இருந்து கட்டுபாட்டு அறைக்கு சிக்னல் வரவில்லை. தற்போது பதிவான தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கி.மீ. தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் தகவல் தருவது நின்றுவிட்டது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.