நியூயார்க், செப்.7: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப்போட்டிக்கு நட்சத்திர வீரர் ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.

உலகின் 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகின்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ரபேல் நடால் மற்றும் மேட்டியோ பெரெட்டினி விளையாடினர்.

74 நிமிடங்கள் வரை நீடித்த முதல் செட்டை டை பிரேக்கரில் 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார். அதனைத் தொடர்ந்து அடுத்த இரு செட்களையும் எளிதாக கைப்பற்றி, 7-6, 6-4, 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் டேனில் மெட்வடேவை எதிர்த்து நடால் விளையாடுகிறார்.