நெல்லூர், செப்.7: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

நெல்லூரில் பல இடங்களில் கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் யகரலா அருகே 4 பேரை கைது செய்த தனிப்படையினர் 4 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 34 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள், கம்ப்யூட்டர், ஸ்கேனர், கலர் பிரிண்டர், 7 செல்போன்கள், பேப்பர் கட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.