பெங்களூரு, செப்.7: நிலவில் தரையிறங்குவதற்கு ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு முன் விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிப்பானது. அதே சமயம் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அடுத்த ஒரு ஆண்டுக்கு நிலவைப்பற்றிய அரிய தகவல்களை இது அனுப்பும், எனவே சந்திரயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தபோதிலும் 95 சதவீதம் வெற்றி பெற்று இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

பூமியில் இருந்து 3.8 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சந்திரனில் தென் துருவதில் தரையிறங்குவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் ரூ 976 கோடி செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்து கடந்த மாதம் 22-ம் தேதி பிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தினார்கள்.

விக்ரம் லேண்டர். ஆர்பிட்டர லேண்டர். பிரக்கியான் லேண்டர் ஆகிய 3 பிரிவுகளை கொண்ட சந்திரயான்-2 வில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக கொண்டு வரப்பட்டது. 5 முறை நிலவுக்கு அருகாமையில் கொண்டு செல்வதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

இறுதி கட்டமான இன்று 7-ம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவின் தென் பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்ச்சியை காண இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைவரும் காத்திருந்தனர். பிரதமர் மோடி பெங்களூரு பீனியாவில் உள்ள தரைகட்டுப்பாட்டிற்கு வந்து இந்த அரிய நிகழ்வை காண ஆவலுடன் காத்திருந்தார். 1.30 மணிக்கு பிறகு ஒவ்வொரு மணித்துளியும் திக் திக் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. எந்த நிமிடத்திலும் அற்புதம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென விஞ்ஞானிகள் மத்தியில் அமைதியும், சோகமும் நிலவியது. தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பை காண வீடுகளிலும், பொது இடங்களிலும் ஏராளமானோர் குழுமயிருந்தனர். இந்த சமயத்தில் அதிகாலை 1.50 மணி அளவில் திடீரென விக்ரம் லேண்டருடன் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டதாக தெரியவந்தது. பிரதமர் மோடி கன்னத்தில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தார். இஸ்ரோ சிவன் பிரதமரிடம் வந்து நடந்ததை தெரிவித்தார். சற்று நேரத்தில் பிரதமர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் இஸ்ரோ சிவன் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் நிலவுக்கு 2.1 கி.மீ தொலைவில் நெருங்கியபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.  இது வரை கிடைத்த தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம் என்று அறிவித்தார்.

15 நிமிட நேரம் எங்களுக்கு மிக பயங்கரமானதாக இருந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திடீரென சிலர் ஓடிவந்து உங்கள் கைகளில் அப்போது தான் பிறந்த குழந்தையை உங்கள் கையில் கொடுத்தால் முறையான உதவியின்றி உங்களால் குழந்தையை கையில் வைக்க இயலுமா? அதேபோல் தான் நாங்கள் இதை கையாண்டு வந்தோம் என்று சிவன் மேலும் கூறினார்.

தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் விக்ரம் லேண்டரின் வேகம் 35 கி.மீ அளவிற்கு குறைக்கப்பட்டது. தரையிறங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் கரடு முரடான பள்ளங்களை கொண்டது. இதை பக்குவமாக தரையிறக்குவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்ட போது திடீரென சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு, பிரக்கியான் லேண்டர் பிரிந்து நிலவில் நடமாடுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் சந்திரயானின் இன்னொரு பகுதியான ஆர்பிட்டர் தற்போது நிலவுக்கு அருகாமையில் சுற்றி வருகிறது. அடுத்த ஒரு ஆண்டுக்கு இது நிலவை படம் எடுத்து அனுப்பும், அந்த வகையில் சந்திரயான்-2 தோல்வி என கூற முடியாது. பின்னடைவுதான் ஏற்பட்டு உள்ளது என்றாலும் 95 சதவீதம் வெற்றி பெற்று இருக்கிறோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

மேலும் வருங்காலத்தில் ஆய்வு செய்வதற்கு பயனுள்ள தகவல்களை ஆர்பிட்டர் மூலம் பெற முடியும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் கூறினர்.