பெங்களூரு, செப்.7: திட்டமிட்டபடி நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்காததால் மனமுடைந்து கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

நிலவை நோக்கி 48 நாள் பயணத்திற்கு பிறகு சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பார்ப்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு பெங்களுரு வந்தார். இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி செல்வதை பார்த்துக்கொண்டு இருந்தார். 1.30 மணியில் இருந்து திக் திக் என பரபரப்பு ஏற்பட்டது. திடீரென இஸ்ரோ தலைவர் சிவன் பிரதமரிடம் வந்து விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்ற விவரத்தை தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அதிகாலை 2 மணி அளவில் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். கவர்னர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். காலை 8 மணிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார்.

காலையில் மீண்டும் இஸ்ரோ மையத்துக்கு வந்த பிரதமர் மோடி, விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அறிவியலுக்கு தோல்வியே கிடையாது என்று விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாடே இணைந்து நிற்கிறது. சந்திரயான்-2 மூலம் இந்திய விண்வெளி திட்டத்திற்கு இன்னும் நல்ல செய்தி வரவேண்டியது இருக்கிறது. நிலவை தொடவேண்டும் என்ற நமது எண்ணம் தற்போது மேலும் வலுவடைந்து இருக்கிறது.

வரலாற்றில் நாம் பெற வேண்டிய வெற்றி தாமதம் அடைந்து இருக்கிறது. இந்த தாமதத்தால் நமது உணர்வுகளை அடக்கி விட முடியாது. நாம் மீண்டும் முயற்சி செய்வோம். அற்புதங்களை படைப்போம். இதற்காகவே நமது நாகரீகம் உயர்ந்து இருக்கிறது.

நாம் செய்த முயற்சி நல்ல பலனை தந்து இருக்கிறது என்பதில் நான் பெருமையடைகிறேன். நமது விஞ்ஞானிகள் குழு கடினமாக பணியாற்றி இருக்கிறது. நீண்ட தூரம் பயணித்து இருக்கிறீர்கள், நமது முன்னோரின் போதனைகள் நம்முடன் இருக்கிறது. இன்றைய நாளில் நாம் கற்றது வரும் காலத்தில் நம்மை பலமிக்கவர்களாக ஆக்கும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

பின்னர் அங்கிருந்து விடைபெறும் போது இஸ்ரோ தலைவர் சிவன் கலங்கிய கண்களுடன் காணப்பட்டார். பிரதமர் மோடி அவரைக் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய காட்சி விஞ்ஞானிகளிடம் அவர் கொண்டிருந்த அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.