வாகன ஓட்டுநர்களுக்கான புதிய நவீன பயிற்சி முறை

சென்னை

சென்னை, செப்.7: வாகன ஓட்டுநர்களுக்கான புதிய நவீன பயிற்சி முறையை சென்னையில் ‘சிமுலேட்டர்’ மூலம் துவக்கி உள்ளது. ஆசியாவிலேயே முதல் முறையாக, 5-ம் தலைமுறை தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் டிரைவர்களுக்கான பயிற்சி மையம், சென்னையில் கடந்த 30-ந் தேதி தொடங்கப்பட்டது. ‘சிமுலேட்டர்’ மூலம் பஸ், லாரி, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகன டிரைவர்களுக்கு உயர்நிலை பயிற்சி அளிக்க இந்த மையம் திட்டமிடுகிறது.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள, இந்திய தானியங்கி வாகனங்களுக்கான சங்கத்தின் தென்னிந்திய கிளை அலுவலகத்தில் சர்வதேச ரோட்டரி சங்கத்தின் 3232 மாவட்ட கவர்னர் ஜி. சந்திரமோகன் இப்பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.  தானியங்கி வாகனங்களுக்கான சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் டி.டி. சதாசிவம் மற்றும் பிற செயற்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி மையத்தில், “பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்” என்ற பிரச்சாரத்தின் கீழ் – ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 200 பேருக்கு இலவசப் பயிற்சி அளிக்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. இது அடுத்த 6 மாதங்களில் நிறைவு செய்யப்படும். இந்த மையத்தில் காப்புரிமை பெற்ற ஒரு சிமுலேட்டர் நிறுவப்பட்டுள்ளது. அதாவது, உண்மைக்கு நெருக்கமான மாதிரிகளை உருவாக்கி, அதைக் கொண்டு பயிற்சி அளிக்கும் திறன் பெற்ற வன்பொருள் மற்றும் மென்பொருள் இணைந்த தொகுப்பு நிறுவப்பட்டுள்ளது.