சென்னை, செப்.7: சென்னை அண்ணாநகரில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். புழல் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 35). இவர், சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று மதியம் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு அதனை தனது இருசக்கர வாகனத்தின் பின்சீட்டில் வைத்து லாக் செய்துவிட்டு, 2-வது அவென்யூவில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுவந்துள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது, இருசக்கர வாகன லாக் உடைக்கப்பட்டதுடன், அதில் வைத்திருந்த பணமும் கொள்ளைப்போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.